Friday, 14 September 2018

உறுதியான நம்பிக்கையை உருவாக்குங்கள்

அன்பானவர்களே!

உங்கள் தேர்வு அரசுப் பணி என்று முடிவு செய்துவிட்டீர்கள்.

அடுத்து அதைப் பற்றி கனவு காணுங்கள் என்று நிச்சயமாக நான் சொல்லப்போவதில்லை.

இப்பொழுது நீங்கள் சுற்றுவட்டங்களை சமாளிக்க வேண்டியிருக்கும்.

அரசுத் தேர்வா? முடியுமா? உன்னால முடியுமா?  நேரத்தை வீணடிச்சுட்டு இருக்க..

இது போன்ற அனேகரின் அவநம்பிக்கை பேச்சுக்களை கேட்க வேண்டியிருக்கும். 

அப்படிப்பட்டவர்களை விட்டு விலகி விடுவது நல்லது.  ஆனால் மனிதர்கள் அப்படித்தான் இருப்பார்கள் எனவே உங்கள் அரசுப் பணி கனவை வேறு எவருடனும் கூறாமல் இருப்பது நல்லது. உங்களால் ஒரு விஷயத்தைப் பற்றி அவர்களோடு பேசமுடியவில்லை என்றால் கவனத்தை வேறுபக்கம் திருப்புங்கள். அவர்கள் அமைதியாகி விடுவார்கள்.  பகையும் இல்லை நட்பும் இல்லை. 

பகையாகவும் இருக்கத் தேவை இல்லை. அதிகம் நட்பாகவும் பழகி உருகவும் தேவை இல்லை.

அடுத்து நீங்கள் சமாளிக்க வேண்டிய முக்கிய நபர் நீங்கள் தான்.

உங்களிடம் ஏற்படக் கூடிய பயம் தான்.

பயம்

பயம் ஒரு எச்சரிக்கை உணர்வு. 

அது கடுமையான மனநோயாகவும் மாற வாய்ப்பிருக்கிறது. இப்பொழுது இந்த இடத்தில் நாம் பயத்தை எச்சரிக்கை உணர்வாகவே கையாள்வோம். 

பய உணர்வு வரும் போது உங்கள் எண்ணங்களை ஆராய்ந்தால் அதில் நம்பிக்கையின்மையின் ரேகைகள் தெரியும்.

முடியுமா? முடியாதா? என்ற இருவித எண்ணங்களில் முடியும் என்பதை மாத்திரமே நீங்கள் பிடித்துக்கொள்ள வேண்டும்.

நீங்கள் மற்றவரோடு உரையாடுவதை விட உங்களோடு தான் அதிகம் உரையாடுகிறீர்கள்.

நீங்கள் உங்களோடு பேசும் போது... உங்களால் முடியும் என்ற அந்த எண்ணத்தை உறுதியாக உங்களுக்குள் விதைக்க ஆரம்பியுங்கள்.

உறுதியான நம்பிக்கையை உருவாக்கிக்கொள்ளுங்கள். முடியுமா? முடியாதா?  

உங்களால் முடியும்

அதை செய்து முடிக்க நீங்கள் உங்களால் ஏன் முடியாது என்ற கேள்வியை எழுப்புங்கள்.

எ.கா

இந்த கேள்வியை நான் என்னிடம் கேட்டுக்கொள்கிறேன்.

அரசு பணியாளராக ஏன் என்னால் முடியாது.

1. படிக்க நேரமில்லை
2. வேலை செய்துக்கொண்டு படிக்க முடியவில்லை
3. வீட்டில் அமர்ந்து படிக்கும் சூழல் இல்லை
4. படிப்பில் மனம் லயிக்கவில்லை
5.என்னுடைய விருப்பம் வேறு ஒன்றாக இருக்கிறது.

இது போன்று சில பதில்கள் உங்களுக்கும் கிடைக்கலாம்.

படிக்க நேரமில்லை. நான் வேலை செய்துக்கொண்டிருக்கிறேன். 

என் வேலையே என் படிப்பாக மாற்ற விரும்பி உங்களோடு ப்ளாகில் பேசிக்கொண்டிருக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

நான்  அரசு பணியாளர் இல்லை. நான் வேறொரு வேலை செய்துக்கொண்டிருக்கிறேன்.

நான் சில சமயம் ரெகார்டிங் செய்து கேட்டுக்கொண்டிருப்பேன்.

என் வேலைகளுக்கு மத்தியிலும் சிறு துண்டு காகித்தில் சிறு குறிப்புகள் எடுத்து அதை  அவ்வப்போது எடுத்து பார்த்துக்கொள்வேன்.

பிறகு வெட்டி அரட்டை அடிக்க மாட்டேன்.

என்னுடையது கடின உழைப்பு இல்லை.

நான் எப்போதும் புத்தகமும் கையுமாக இருப்பதில்லை. 

புத்தகத்தை கையில் எடுத்தால் நிச்சயமாக நான் உறங்கிவிடுவேன்.

முக்கியமான விஷயம் நாம் எத்தனை மணி நேரம் படிக்கிறோம் என்பதில்லை.  

நாம் எவ்வளவு நினைவில் வைத்துக்கொள்கிறோம் என்பதே.

மீண்டும் மீண்டும்  படித்தவைகளை அசைபோடுவது நினைவுகளை ஆழப்படுத்தும்.

உங்களை தயார் செய்துக்கொள்ளுங்கள்

உங்களால் முடியும் என்று உங்களுக்குள்ளாக சொல்லிக்கொள்ளுங்கள். பய உணர்வு ஏற்படும் போதும்,  நம்பிக்கையற்று போவது போல் தோன்றும் போதும், என்னால் இதை செய்ய முடியும் என்று சொல்லி உங்களுக்குள்ளாக உறுதியான நம்பிக்கையை உருவாக்கிக்கொள்ளுங்கள்.

தோல்வியை எதிர்பார்த்துக்கொண்டு உங்களால் வெற்றியை உருவாக்க முடியாது.

வெற்றியை மாத்திரம் எதிர்பாருங்கள்.





No comments:

Post a Comment