Sunday, 28 April 2013

பொதுத்தமிழ் - 2


திருக்குறள்

சொற்பொருள்
  • விழுப்பம்  சிறப்பு
  • ஓம்பப்படும்  காத்தல் வேண்டும்

இலக்கணக்குறிப்பு
  • ஒழுக்கம்  தொழிற்பெயர்
  • படும்  செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று.

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.

  • எம்முறையில் ஆராய்ந்து பார்த்தாலும் ஒழுக்கமே நல்ல துணை ஆகும். ஒழுக்கத்தை காப்பது கடினமானாலும் எப்பாடுபட்டாவது, அதனை விரும்பிக் காத்தல்வேண்டும்.

சொற்பொருள்
  • பரிந்து  விரும்பி
  • தேரினும்  ஆராய்து பார்த்தாலும்

இலக்கணக்குறிப்பு
  • காக்க  வியங்கோள் வினைமுற்று
  • பரிந்து, தெரிந்து  வினையெச்சங்கள்

பிரித்தறிதல்
  • பரிந்தோம்பி  பரிந்து + ஓம்பி
  • தெரிந்தோம்பி  தெரிந்து + ஓம்பி.

ஒழுக்கம் முடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.

·        ஒழுக்கம் உள்ளவரே உயர்குடியினர். அவ்வொழுக்கம் இல்லாதவர் இழிகுடியினர்.

சொற்பொருள்
  • குடிமை  உயர்குடி
  • இழுக்கம்  ஒழுக்கம் இல்லாதவர்

இலக்கணக்குறிப்பு
  • இழிந்த பிறப்பு  பெயரெச்சம்

மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்


  • ஒருவன் தான் கற்ற கல்வியை மறந்தாலும் அதனை மீண்டும் கற்றுக்கொள்ள இயலும். ஆனால் ஒழுக்கம் குறைந்தால், அவனுடைய குடிப்பிறப்பின் சிறப்பு அழிந்து போகும்.

இலக்கணக்குறிப்பு
  • கெடும்  செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று
  • கொளல்  அல் ஈற்றுத் தொழிற்பெயர்

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை,
ஒழுக்கம் இலான்கண் உயர்வு. (உவமை அணி)

  • பொறாமை உடையவனிடம் செல்வம் நிலைக்காது. அது போல, ஒழுக்கம் இல்லாதவனிடம் உயர்வு இருக்காது.

சொற்பொருள்
  • அழுக்காறு  பொறாமை
  • ஆக்கம்  செல்வம்

இலக்கணக்குறிப்பு

  • உடையான்  வினையாலணையும் பெயர்

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.


  • ஒழுக்கம் தவறுதலால் ஏற்படும் குற்றங்களை நண்குணர்ந்த மனவலிமை மிக்கோர், அவ்வொழுக்க நெறியிலிருந்து சிறிதும் விலகமாட்டார்.

சொற்பொருள்
  • ஒல்கார்  விலகமாட்டார்
  • உரவோர்  மனவலிமையுடையோர்
  • ஏதம்  குற்றம்

இலக்கணக்குறிப்பு
  • உரவோர்  வினையாலணையும் பெயர்

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.



  • ஒழுக்கமுடையோர் மேன்மை அடைவர், ஒழுக்கம் இல்லாதவர் அடையக் கூடாத பழியை அடைவர்.

சொற்பொருள்

  • எய்துவர்  அடைவர்
இலக்கணக்குறிப்பு
  • எய்தாப் பழி  ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • எய்துவர்  பலர்பால் வினைமுற்று
பகுபத உறுப்பிலக்கணம்

  • எய்துவர்  எய்து + வ் +அர், எய்து பகுதி வ் எதிர்கால இடைநிலை, அர்  பலர்பால் வினைமுற்று விகுதி.

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.

  • நல்லொழுக்கம் என்பது நன்மை என்னும் விளைவைப் பெறுவதற்கான விதையாகும். தீயொழுக்கம் எப்பொழுதும் துன்பத்தையே விளைவாகத் தரும்.

சொற்பொருள்

  • இடும்பை  துன்பம்
  • வித்து  விதை
இலக்கணக்குறிப்பு

  • நல்லொழுக்கம், தீயொழுக்கம்  பண்புத்தொகைகள்

ஒழுக்கம் உயடையவர்க் கொல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.

நல்லொழுக்கம் உடையோரால் தவறியும் தம் வாயால் தீமைதரும் சொற்களை சொல்ல இயலாது.

சொற்பொருள்
  • ஒல்லாவே  இயலாவே

இலக்கணகுறிப்பு

  • சொலல்  தொழிற்பெயர்

உலகத்தோ டொட்ட ஒழுகல், பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்

  • உயர்ந்தாரோடு பொருந்த வாழும் கல்வியை கல்லாதவர், எவ்வளவுதான் கற்றிருந்தாலும் அறிவில்லாதவரே ஆவார்.

சொற்பொருள்
  • உலகம்  உயர்ந்தோர்
  • ஒட்ட  பொருந்த
  • ஒழுகல்  நடத்தல் வாழ்தல்

பகல்வெல்லும் கூகையைக் காக்கை, இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.


  • பகற்பொழுதில் தன்னிலும் வலிய கோட்டானைக் காக்கை வென்றுவிடும். அது போலப் பகையை வெல்லக் கருதும் வேந்தர், ஏற்ற காலம் அறிந்து செயற்படுதல்வேண்டும்.

  • கூகை  கோட்டான்
  • இகல்  பகை


பருவத்தோ டொட்ட ஒருகல் திருவினைத்
தீராமை யார்க்குங் கயிறு.


  • காலத்திற்கும் பொருந்திய செயலை மேற்கொள்வதே செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்

சொற்பொருள்
  • திரு  செல்வம்
  • தீராமை  நீங்காமை

அருவினை என்ப உளவோ கருவியாற்
காலம் அறிந்து செயின்

  • தகுந்த கருவிகளோடு ஏற்ற காலமறிந்து செயல்பட்டால், செய்தற்கரிய செயல்கள் எவையுமில்லை.

சொற்பொருள்
  • அருவினை      செய்தற்கரிய செயல்
இலக்கணக்குறிப்பு
  • அருவினை      பண்புத்தொகை
  • அறிந்து          வினையெச்சம்
  • பகுபத உறுப்பிலக்கணம்
  • அறிந்து          அறி + த் (ந்) + த் கூட்டல் உ. அறி பகுதி த்  சந்தி த்  ந் ஆனது விகாரம், த்  இறந்த கால இடைநிலை, உ  வினையெச்ச விகுதி.

ஞாலம் கருதினுங் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்.

காலமறிந்து, இடத்தோடு பொருந்தச் செயல்பட்டால், உலகத்தையே அடைய விரும்பினும் கைகூடும்.

  • ஞாலம்  உலகம்

காலம் கருதி இருப்பர், கலங்காது
ஞாலம் கருது பவர்.

  • பொருள்  உலகம் முழுவதையும் ஆளக் கருதுபவர், அதற்குரிய காலத்தை எதிர்பார்த்துக் கலங்காமல் காத்திருப்பர்.

இலக்கணக்குறிப்பு

  • கலங்காது  எதிர்மறை வினையெச்சம்

ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து. (அணி  உவமையணி)



  • ஊக்கம் உடையவன் காலத்தை எதிர்பார்த்து அடங்கிருப்பதானது, ஆட்டுக்கடா பகையைத் தாக்குவதற்குப் பின்வாங்கும் தன்மையைப் போன்றது.

சொற்பொருள்
  • ஒடுக்கம்  அடங்கியிருப்பது
  • பொருதகர்  ஆட்டுக்கடா
  • பேருந்தகைத்து  பின் வாங்கும் தன்மையது


பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்
துள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

  • அறிவுடையார், பகைவர் தீங்கு செய்த உடனே சினத்தை வெளிப்படுத்தமாட்டார் அவரை வெல்லுவதற்கான காலம் வரும் வரை, அச்சினத்தை மனத்தினுள் மறைத்து வைத்திருப்பர்.


சொற்பொருள்
  • பொள்ளென  உடனே
  • புறம்வேரார் -  வெளிப்படுத்தமாட்டார்
  • உள்வேர்ப்பர்  மனத்தினுள் மறைத்து வைத்திருப்பர்
  • ஒள்ளியவர்  அறிவுடையார்.


செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.

  • பகைவரைக் காணும் போது பணிவாக இருத்தல் வேண்டும். அப்பகைவர்க்கு முடிவுக்காலம் வரும் போது, அவர்தம் நிலைமை தலைகீழாய் மாறிவிடும்.

சொற்பொருள்
  • செறுநர்  பகைவர்
  • சுமக்க  பணிக
  • இறுவரை  முடிவுக்காலம்
  • கிழக்காந்தலை  தலைகீழ் (மாற்றம்)

எய்தற் கரிய தியைந்தக்கால், அந்நிலையே
செய்தற் கரிய செயல்.

  • பொருள்  கிடைத்தற்கு அரிய வாய்ப்புக் கிடைத்தபொழுது, அவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்பொழுதே செய்தற்கரிய செயல்களை செய்தல் வேண்டும்.

சொற்பொருள்
  • எய்தற்கு  கிடைத்தற்கு
  • இயைந்தக்கால்  கிடைத்தபொழுது

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து. அணி  உவமையணி.

  • பொருள்  வாய்ப்பற்ற காலத்தில் கொக்கைப்போல் அமைதியாக காத்திருத்தல் வேண்டும். உரிய காலம் வாய்த்ததும் கொக்கைப்போல் விரைந்து செயலைச் செய்து முடித்தல் வேண்டும்.

சொற்பொருள்
  • கூம்பும்  வாய்ப்பற்ற
  • சீர்த்த இடம்  உரிய காலம்



ஆசிரியர் குறிப்பு
  • திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்

  • தமிழுலகம் இவரை முதற்பாவலர், தெய்வப்புலவர், செந்நாப்போதார், பொய்யில்புலவர், பெருநாவலர் முதலிய பெயர்களால் போற்றுகின்றது.

  • பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் பொதுநெறி காட்டியவர் திருவள்ளுவர்.

  • திருவள்ளுவர் கி.மு 31ல் பிறந்தவர் என அறிஞரால் உறுதி செய்யப்பட்டுத் திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.

  • தமிழக அரசு, தை திங்கள் இரண்டாம் நாளைத் திருவள்ளுவர் நாளாக அறிவித்துக் கொண்டாடி வருகின்றது.

நூற்குறிப்பு


  • திரு + குறள் திருக்குறள்.
  • மேன்மையான கருத்துக்களைக் குறள் வெண்பாக்களால் கூறும் நூலாதலின், திருக்குறள் என பெயர் பெற்றது.
  • திருக்குறள் ஈரடிகளில் இயற்றப்பட்டிருப்பினும் விரிவான பொருளைத் தருகின்றது.
  • திருக்குறள் நாடு, மொழி, இனம், மதம், காலம் ஆகியவற்றை கடந்து நிற்கிறது.
  • திருக்குறள் உலகப்பொதுமறை எனப் போற்றப்படுகிறது.
  • திருக்குறள் பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • திருக்குறள் அறம், பொருள், இன்பம் என முப்பாலாகப் பகுக்கப்பட்டுள்ளது.
  • திருக்குறள் 9 இயல்களையும் 133 அதிகாரங்களையும், 1330 குறட்பாக்களையும் கொண்டு விளங்குகிறது.
  • திருக்குறள் ஆங்கிலம், கிரேக்கம், இலத்தீன் முதலிய உலகமொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
  • திருக்குறளுக்குப் பலர் உரை எழுதியுள்ளனர்.
  • தமிழ்ச் சான்றோர் பலரால் இயற்றப்பட்ட திருவள்ளுவமாலை, திருக்குறளின் பெருமைகளைப் போற்றிப் புகழ்கிறது.

  • வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே என்றும் இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே என்றும் பாவேந்தர் பாரதிதாசன் திருக்குறளைப் போற்றிப் புகழ்ந்துள்ளார்.

வெல்லாத தில்லை திருவள்ளு வன்வாய் விளைத்தவற்றுள்
பொல்லாத தில்லை புரைதீர்ந்த வாழ்வினிலே அழைத்துச்
செல்லாத தில்லை பொதுமறை யான திருக்குறளில்
இல்லாத தில்லை இணையில்லை முப்பாலுக்கிந் நிலத்தே.

                                   பாவேந்தர் பாரதிதாசன்

பதினெண்கிழ்கணக்கு நூல்கள்
நாலடி, நான்மணி, நானாற்பது, ஐந்திணை, முப்பால்,
கடுகம், கோவை, பழமொழி  மாமூலம்,
இன்னிலைய, காஞ்சியுடன், ஏலாதி என்பவே,
கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு.

  • மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம் 1812இல் திருக்குறளை முதன்முதலில் பதிப்பித்து தஞ்சையில் வெளியிட்டார்.

No comments:

Post a Comment