ஏலாதி
வணங்கி வழியொழுகி மாண்டார்சொல் கொண்டு
நுணங்கிநூல் நோக்கி நுழையா – இணங்கிய
பால்நோக்கி வாழ்வான் பழியில்லா மன்னனாய்
நூல்நோக்கி வாழ்வான் நுனித்து
-கணிமேதாவியார்
பொருள் – பிறர்க்கும் பணிந்தும், நல்வழியில் நடந்தும், மாண்புடைய சான்றோர் அறிவுரைகளைப் பின்பற்றியும், நுண்ணறிவு நூல்களை ஆராய்ந்தும், அவை நவிலும்வண்ணம் வாழும் பழியிலா மன்னன் நூல்களெல்லாம் போற்றும்படி வாழ்வான்.
சொற்பொருள்
வணங்கி – பணிந்து
மாண்டார் – மாண்புடைய சான்றோர்
நுணங்கிய நூல் – நுண்ணறிவு நூல்கள்
நோக்கி – ஆராய்ந்து
இலக்கணக்குறிப்பு
நூல்நோக்கி – இரண்டாம் வேற்றுமைத்தொகை
பழியில்லா மன்னன் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
பகுபத உறுப்பிலக்கணம்
நோக்கி – நோக்கு+இ. நோக்கு – பகுதி, இ – வினையெச்ச விகுதி்; வாழ்வான் – வாழ்+வ்+ஆன். வாழ் – பகுதி, வ் –எதிர்கால இடைநிலை, ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி; நுனித்து-நுனி+த்+த்+உ. நுனி – பகுதி, த் – சந்தி, த்-இறந்தகால இடைநிலை, உ-வினையெச்ச விகுதி.
பிரித்தறிதல்
வழியொழுகி - வழி+ஒழுகி.
ஆசிரியர் குறிப்பு
ஏலாதியை இயற்றியவர் கணிமேதாவியார்.
கணிமேதாவியாருக்கு கணிமேதையர் என்னும் மற்றொரு பெயருமுண்டு.
கணிமேதாவியார் சமண சமயத்தவர் என்பர்.
கணிமேதாவியார் சமண சமயத்திற்கே உரிய கொல்லாமை முதலான உயரிய கருத்துக்களை ஏலாதியில் வலியுறுத்திக் கூறுகிறார்.
கணிமேதாவியார் காலம் கி.பி ஐந்தாம் நூற்றாண்டு.
கணிமேதாவியார் திணைமாலை நூற்றைம்பது என்னும் நூலையும் இயற்றியுள்ளார்.
நூற்குறிப்பு
பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் ஏலாதியும் ஒன்று.
ஏலாதி சிறப்புப் பாயிரம், தற்சிற்புப் பாயிரம் உட்பட 81வெண்பாக்களை கொண்டுள்ளது.
ஏலாதி நான்கடிகளில் ஆறு அருங்கருத்துக்களை நவில்கிறது.
ஏலாதி தமிழருக்கு அருமருந்து போன்றது.
ஏலம் என்னும் மருந்து பொருளை முதன்மையாகக் கொண்டு இலவங்கம், சிறுநாவற்பு, சுக்கு, மிளகு, திப்பிலி, ஆகியவற்றினால் ஆன மறந்துப் பொருளுக்கு ஏலாதி என்பது பெயர்.
ஏலாதி உண்பவரின் உடற்பிணியைப் போக்கும்.
ஏலாதியின் நற்கருத்துகள் கற்போரின் அறியாமையை அகற்றும்.
ஏலாதியின் ஐம்பத்தோன்பதாவது பாடல் பத்தாம் வகுப்பிற்கு பாடமாக அமைந்துள்ளது.
எட்டுத்தொகை நூல்கள்
நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூ(று),
ஒத்த பதிற்றுப்பத்(து,) ஓங்கு பரிபாடல்,
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு, அகம், பறம் என்(று)
இத்திறத்த எட்டு தொகை.
பத்துப்பாட்டு நூல்கள்
முருகு, பொருநாறு, பாணிரண்டு, முல்லை,
பெருகு வளமதுரைக் காஞ்சி, - மருவினிய
கோலநெடு நல்வாடை, கோல்குறிஞ்சி, பட்டினப்
பாலை, கடாத்தொடும் பத்து.
No comments:
Post a Comment